‘மதினிமார்கள் கதை’ தொகுப்பிலுள்ள ஒரு சிறுகதை picture_797__14098_zoom

ஓஷோ, “மிர்தாதின் புத்தகம்” பற்றிக் கூறும் போது அதை ‘இதயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம்’ என்று கூறுகிறார். அதுபோல், மிகச்சில புத்தகங்களே நாம் வாசிக்கும் போது  நம் மனத்தை பிரக்ஞை இழக்கச்செய்து, பிரபஞ்ச பிரக்ஞையில் சேரும் வாசிப்பானுபவத்தை கொடுக்கிறது. அவ்வாறு வாசித்த கதைகளை நினைவு கூர்ந்தால் மிக சொற்பமே மிஞ்சும். ஏனென்றால் எந்த கதையும், மனிதப் பாத்திரங்களையும், சம்பவங்களையும் தான் கதைக்களமாக கொண்டிருக்கும். கதைகளுக்குள், மனித வெளிக்கு மாற்றான பிரபஞ்ச வெளியும், அதில் பல்வேறு லயங்களையும், வர்ணங்களையும் நிறைத்து காணப்படும் கதைகளை தேர்ந்தெடுத்தோம் என்றால் கோணங்கியின் இந்த ‘பாழ்’ கதைக்கு உறுதியான இடமுண்டு.

ஆதியூரில் இருக்கும் பூர்வீக தோட்டத்தில் தன் தந்தை பண்டாரத்துடன் வாழும் ஆண்டாள், பூத்தொடுக்கும் சித்திரவேலுவின் மீதுள்ள காதலும், பன்னீரக்காவின் (பன்னீர்மரம்) ஏக்கமும், கால மாற்றத்தில் அந்தப்பூர்வீக தோட்டம் அருணாசலப்புலவரின் சுண்ணாம்பு களைவாய் ஆவதுமே இந்தக்கதையின் சாராம்சம். பண்டாரம், ஆண்டாள், பன்னீரக்கா, சித்திரவேலு மற்றும் இறுதியில் வரும் அருணாசலப்புலவர் – இவர்கள் ஐவர் மட்டுமே கதை மாந்தர்கள். ஆனால், கோணங்கியின் எழுத்தின் ஆதிக்கம் இந்த ஐவரைத் தாண்டி, தோட்டச்சூழல், பன்னீர் பூ, கிணறு, பறவைகளின் சத்தம், காலமாற்றம், அதனால் ஏற்படும் தோட்டத்தின் மாற்றங்கள், அந்த மாற்றங்களோடு பன்னீரக்காவின் சோகம், ஏக்கம், அழுகை என்று அந்த தோட்டத்திலேயே நம்மையும் உழல விடுகிறார்.

         “ஆதியூருக்கு வரும் புதுமண பெண்கள் கிணத்துக்குள் மிதக்க விட்ட கல்யாண வெத்தலை மிதந்து கொண்டுவரும். பன்னீர்ப்பூவும் கிணத்தில் விழுந்து வெத்திலைப்படகை பிடிப்பதற்காகப் போராடியது. எப்படியோ படகில் ஏறிவிடும். வெத்திலைப்படகு சுவர் ஒதுங்கி, சுவரில் தட்டித் தட்டி அலை அடிக்கவும் நடுக்கிணற்றில் சிக்கிக் கொண்டு தத்தளித்தது. படகு சரிந்து தண்ணிக்குள்ளே மூழ்கிக் கொண்டிருந்தது பன்னீர்ப்பூ. திரும்பவும் பன்னீரக்கா பூ போடுவாள். நீந்திப் படகேறும் எந்தப் பூவாவது கரை சேராதா என்று. கிணத்துக்கு எது கரை? என்று பன்னீரக்காவின் ஏக்கத்தை வர்ணிப்பதில் புதிய உச்சத்தை தொடுகிறார்.

காலமாற்றத்தினாலும், வறட்சியினாலும், பண்டாரத்தின் ஆன்ம தொடர்பிலிருந்த ஆதியூர் தோட்டம், சுண்ணாம்பு களவாய் ஆவதை… “தோட்டத்தில் புதிதாக முளைத்திருக்கும் குரூர விருட்சமான சுண்ணாம்புக் களவாயில். காளவாயில்காரன் ஆதியூர் அருணாச்சலப் புலவர், மூணுமரக்கா தானியத்துக்கு ஒரு கோட்டை சுண்ணாம்பும் ஆழாக்கு சோளத்துக்கு பக்காப்படியும் அளந்து கொடுப்பான் என்று எள்ளலுடன் கூறுகிறார்.

கோணங்கியின் செறிவான எழுத்துக்களை உள்வாங்க ஆழ்ந்த வாசிப்பும், மீள் வாசிப்பும் தேவைப்படும். இந்த ‘பாழ்’ கதையும் அதற்கு விதிவிலக்கல்ல. மனிதப் பாத்திரங்களையும், கட்டடங்களையும் கதைக்களமாக நம்பிக்கொண்டு கோணங்கி கதைகளுக்குள் நுழையும் ஒருவனுக்கு கோணங்கியிடம் பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று பாலைநிலவன் அடிக்கடி கூறுவார். அதுபோல், இந்த ‘பாழ்’ கதையிலும் கண்ணனை நினைத்து ஏங்கும் மீராவின் காதலைப் போல் பன்னீரக்காவின் ஏக்கம் இருக்கிறதே, இதெல்லாம் சாத்தியம் தானா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், யதார்த்தத்தின் எல்லைகளையெல்லாம் அடித்து நொறுக்கி கற்பனையின் எல்லையையும் தாண்டி செல்கிறது கோணங்கியின் கைவண்ணம். அவரின் கைபிடித்து நடந்தால், கதையோடு இயற்கையின் பால்வெளியில் உலவிவிட்டு ஆனந்தமாக திரும்பி வரலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s