2008ம் ஆண்டு இறுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலின் எதிரொலியாக பெரும்பான்மையான பாலஸ்தீனர்கள் காஸா பகுதியிலும் எஞ்சியவர்கள் உலகெங்கிலும் முகமற்ற அகதிகளாக வாழ்கிறார்கள். இதைப்பற்றி, அலைவு இலக்கிய வகையான “காஸா பதில் எழுதுகிறது” என்ற சிறுகதைத் தொகுப்பின்மூலம், காஸா பகுதியில் வாழும் பதினைந்து இளம் எழுத்தாளர்கள் எழுதிய இருபத்தி மூன்று சிறுகதைகளை ரெஃபாத் அலாரீர் வெளிக்கொணர்ந்திருக்கிறார். சாரா அலி எழுதிய இந்த ‘நிலத்தின் கதை’ அதில் ஒன்று.

gwb-cover-v-3

23 நாட்கள் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல் படையினர் நிலச்சமன் இயந்திரங்களைக் கொண்டு பாலஸ்தீனம் முழுக்க உள்ள இயற்கை வளங்களை அடியோடு அழித்தொழிக்கின்றனர்.இதில் தான் ஆசையோடு வளர்த்த மரங்கள் அனைத்தும் அழிந்ததை பார்த்து நினைவு பிசகி எந்நேரமும் சுவரை வெறித்தவண்ணம் இருக்கும் தன் தந்தை மீண்டெழும் தருணத்தை மகள் சொல்லும் கதையே இச்சிறுகதையின் மணிச்சுருக்கம்.

தன் அப்பா தன்னுடைய நிலத்தை படையினர் ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் செல்வதை,”தன் நிலத்தின் அழகால் கவரப்பட்டு தன்னுடைய ஆழ்மனக் குரலுக்கு செவிசாய்த்து தன் நிலத்தை நிர்மூலமாக்காமல் சென்றிருப்பான் என்ற நம்பிக்கையில் சென்றார். மனிதனின் நற்பண்புகளின் மீது நம்பிக்கை கொண்டு அவர் அங்கே சென்றார்”, என்று அந்த மகள் கூறும் போது அந்த வயதானவரின் ஏக்கத்தையும், தோட்டத்தின் அழகையும், எதிரியின் வன்மத்தையும் அயற்கூற்றில் அனைத்தையும் புரிய வைக்கிறார்.

அத்துணை மரங்களும் வெட்டப்பட்டு, தான் வெட்ட நினைத்த ஒரு மரத்தை மட்டும் எதிரி விட்டுவைத்ததை முரண்நகையாக கூறுகிறார். அந்தக் கொடுஞ்சோகத்திலும், இந்த முரண்நகையை பாலஸ்த்தீனியர்களின் பேச்சுப்பொருளாக கொண்டிருந்ததைக் குறிப்பிடும் போது அவர்கள் துரோகத்தையும் தோல்வியையும் அன்றாடம் காண்பவர்கள் என்று சொல்லாமல் தெரிகிறது.

ஒரு தொண்டு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும் மகளிடம், “மக்கள் தங்களுடைய மரங்களை நட உதவி செய்வதை விட்டுவிட்டுக் கொஞ்சம் பணமும் ஒரு மூட்டை மாவும் கொடுக்கும் தரும நிறுவனங்கள் எதற்காவது நீ விண்ணப்பிக்க போகிறாயா? அதெல்லாம் நமக்கு வேண்டாம்” என்று மறுதலிக்கும் வார்த்தைகளில் அந்த வயதானவரின் வைராக்யம், அவரின் ஏழ்மையை மீறித் தென்படுகிறது.

கடைசியாக, 180 மரங்களா நம்மிடம் இருந்தது என்று மகள் கேட்கும் தருணத்தில் அப்பெரியவர் மீண்டெழுகிறார். அந்தக்கணத்தில், “189தேவதாரு, 160எலுமிச்சை, 14கொய்யா… என்ன, நான் சொல்வது கேட்கிறதா? அங்கே 189 தேவதாரு மரங்கள் இருந்தன. 180தோ, 181ஓ, 182ஓ இல்லை. 189 தேவதாரு மரங்கள் இருந்தன” என்று அவர் இயலாமையினால் அழுத்தந்திருத்தமாக திரும்பத்திரும்பக் கூறும் போது, அந்தத் தவிப்பின் வார்த்தைகள் நம் காதுகளில் ரீங்காரமிட்டு நம் துயிலை ஓரிரு தினங்களாவது இழக்கச் செய்கிறது.

அலைவு இலக்கிய வகையில், ஏதோ ஒரு வித நெருக்கடியால் பிறந்த மண்ணை விட்டு வேறொரு மண்ணில் சகிப்புத் தன்மையோடு வாழும்போதோ அல்லது சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் போதோ தான் பிறந்த மண்ணின் பழைய நினைவில் படைக்கும் வலிமிகுந்த புனைவுகள் ஆக்கிரமித்திருக்கும். அவ்வலியே, அலைவு இலக்கியத்தின் பலம். இந்த ‘நிலத்தின் கதை’யும் அவ்வகை வலியின் வழியே படைக்கப்பட்டிருப்பது இச்சிறுகதையின் பலம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s