பித்தின் உச்சம்

நாவலின் ஓரிடத்தில் அமலாவைப் பற்றி ஆசிரியர் JFK (ஜெ. பிரான்சிஸ் கிருபா) இவ்வாறு விளிக்கிறார் “பனிமலர் போலும் இளவரசி போலும் காட்சித் தந்தாள்” என்று. 

ஆம்…இந்தக் கன்னி ஒரு இளவரசி – இளவரசி எங்கிருப்பாள்? அரண்மனை தர்பாரிலே, ராஜ சிம்மாசனத்தில் பொலிவோடு பேரழகியாக வீற்றிருப்பாள் தானே? அப்படி ஒரு அழகியை நாம் சாதாரணமாக தரிசனம் செய்யமுடியுமா…ம்ஹூம்…முதலைகள் இருக்கும் அகழியைத் தாண்டவேண்டும், கோட்டை கொத்தளங்களைக் கடக்க வேண்டும், வாயில் காப்போனிடம் அனுமதிப் பெற்று, பின்பு ராஜ வீதியை கடந்து தர்பாரின் வாசலில்  நின்று அங்கே உள்ள காவலாளிகளிடம் வந்த காரணத்தை சொன்னால்…அவர்கள் ஏற்றால்… உள்ளே சென்று இந்தக் கன்னியை…மாசற்ற கன்னியை ஆசைத் தீர தரிசிக்கலாம். 

img_1158

நான் மேற்க்கூறிய தடைகள் அனைத்துமே தீவிர வாசிப்பற்ற வாசகர்களுக்கானது; அவர்கள் JFKயின் மொழிநடையில் திக்கற்றுத் தொலைந்துப் போய்விடுவார்களோ என்ற ஐயமுள்ளது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் JFK தன் கவித்துவமான எழுத்து நடையின் மூலம் தீவிர இலக்கிய வாசிப்பாளர்களுக்கே சவால் விட்டிருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது. தேர்ந்த வாசிப்பாளன் அந்த சவாலை ஏற்று இந்தப் படைப்பாளி உருவாக்கிய பித்துலகை அடையலாம் 🙂

JFK இந்நாவலை 6 பகுதிகளாக பிரித்திருக்கிறார் – கடல்கோள், சுனை, அருவி, காட்டாறு, கார்முகில் மற்றும் மழை. அனைத்துமே நீர் சம்பந்தப்பட்டது. நீருக்குத் தானே அடர்த்தியான நியாபகங்கள் உண்டு! கடல்கோள், இந்தக் கதையின் நாயகன் பாண்டியின் முற்றிய மனப்பிறழ்வை பற்றிக் கூறும் பகுதி. இதுவரை நாம் பைத்தியத்தின் மனநிலையை ‘மனப்பிறழ்வு’ என்ற மேம்போக்கான ஒர் அர்த்தத்தை தான் கொடுத்திருப்போம். அந்த மனப்பிறழ்வு என்பது எப்படி இருக்கும் என்பதை கவித்துவமாகவும், கொஞ்சம் பயங்கரமாகவுமே தன் போக்கிலே சொல்கிறார் JFK. தாடிக்காரக் கிழவனுடன் பால் நண்டு சாப்பிடுவது, மர குருவியை துரத்துவது, தன் அத்தையின் மகளை(?) ஊஞ்சலில் பார்ப்பது, அங்கிருக்கும் பானையில் கரும் பாம்பிருக்குமோ என்றெண்ணுவது, கிளிஞ்சலை காப்பாற்றப் போய் தானும் மணலில் புதையுண்டு போவதென்று அனைத்தும் பித்துநிலையின் உச்சம். வாசிக்கும் நாமும் அந்த பித்தின் நிலையிலிருந்து  அந்த உள் உலகத்தினை எட்டிப் பார்த்துவிட்டு வரலாம்…தைரியமிருந்தால்!

காவலாளிகளற்ற முந்திரி தோட்டத்திற்கு போனால் நாம் என்ன செய்வோம்? சுதந்திரமாக கைநிறைய, பைநிறைய, மேல்/கால் சட்டை நிரம்ப அள்ளுவோம்… அதெல்லாம் போக அங்கிருக்கும் எண்ணற்ற முந்திரிகளை என்ன பண்ணுவதென்று தெரியாமல் தவிப்போடு வருவதுபோல, நாவல் முழுக்க தேவதேவனின் கவிதைகள்…ஷெல்லியின் ஓர் கவிதை…JFKயின்  கவிதைகள்…என்று பக்கத்திற்கு பக்கம் இருக்கிறது. முக்கியமாக அருவி அத்தியாத்திலிருந்து JFKயின் கவிதைகளும் அருவியாக கொட்டுகிறது. இந்தக் கவிதைகளையெல்லாம் உள்வாங்கவேண்டுமென்றால் குறைந்தது 5  முறையாவது படிக்க வேண்டும். இதிலிருக்கும் கவிதைக்காக மட்டுமே ஒரு blog எழுதவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது எனக்கு.

கவிதை மட்டுமல்லாது JFKன் எழுத்தின் நடையும் கவித்துவமாகவே உள்ளது. கீழிருப்பது உரைநடை…கவிதை அல்ல 🙂

  • அஸ்தமன விளிம்புக் கோட்டில் அவசரத்தில் முட்டி தலை பிளந்து தொடுவானில் சூரியனின் ரத்தம் பரவிப் பெருகிவந்தது. 
  • தூரத்தே துன்பம் புள்ளியாகத் தோன்றி எதிர்கொண்டு வந்தடையும் போது துன்பத்தே நாமொரு புள்ளியாகிப் போவது போல் 
  • பிறப்பு இறப்பு துக்கம் சந்தோசம் சோறு மலம் சடங்கு சாத்திரம் பொழுது விழுவது எழுவது எல்லாம் பழசாகிப் போயிருந்தன இதுகாறும் பூமியில் அவள் வாழ்ந்த பெறுவாழ்வில் 
  • ஒரு மனிதன் பாழ்பட்டுக் கிடைக்கும் காட்சியிலிருந்து வெளியேறும் மரணவசீகரத்தில் சில நிமிடங்கள் கட்டுண்டு நின்ற செல்வத்தின் கணவர் உதடுகளிலிருந்து அனுதாப ஒலிக்குறிகள் தெறித்தன 
  • ‘நம்மால ஏண்ட மட்டும் பாடு பாப்போம். குணமடைஞ்சா கடவுள் சித்தம். அவருக்கும் சம்மதமிலேன்னா சோத்துல எதையாவது கலந்து கொடுத்துர வேண்டியதுதான்’. அவளின் வார்த்தைகள் குட்டிகளை தின்னத் துரத்தும் சர்ப்பங்களாக நெளிந்தோடின.

கடல்கோள் எப்படி பாண்டியின் முற்றிய மனப்பிறழ்ச்சியை கூறுகிறதோ, காட்டாறு பகுதி முழுக்க பாண்டியின் பிறழ்ச்சியின் ஆரம்பநிலையை, ஒரு சிறுமி சுள்ளிக்குச்சியை ஒவ்வொன்றாக எடுத்துவைக்கும் போதிருந்து ஆரம்பிப்பதை (பம்பாயில் நடக்கும் இந்த சம்பவமும் ஒரு பிம்பமே) “அந்தக் கணத்தில் அவன் கண்களுக்கும் மூளைக்குமான தொடர்பு கத்தரிக்கப்பட்டது” என்று சர்வசாதாரணமாக சொல்லி பாண்டியின் இரண்டாம் உலகத்திற்குள் நம்மையும் இழுத்துக் கொண்டுச்செல்கிறார் JFK. அவரின் கையை விட்டுவிடாமல் கவனமாக ஒவ்வொரு வரியாக அயற்சியின்றி படித்தால் பித்தின் உச்சத்தைத் தொடலாம்.

அதன் பிறகு கார்மேகம் & மழை அத்தியாயங்களில் பாண்டி சாராவின் மேல் காதலில் விழுகிறான். திருப்பலி நடக்கும் 10 நாட்களும் படிப்படியாக பாண்டியின் காதல் சாராவின் பால் வளர்கிறது. இதில் சாரா யார் என்பது நம் கற்பனைக்கே விட்டு விடுகிறார் JFK – ஏனென்றால், சாரா, புனிதா, அத்தை என்று அரூபமான மாந்தர்களாக இந்த இரண்டு அத்தியாயங்களில் உலவுகிறார்கள். முடிந்தால் வாசகர்கள் தொடர்பு படுத்திக்கொள்ளட்டும் என்று சவால் விட்டிருக்கிறார் JFK என்று நினைக்கிறேன். 

பள்ளிப்பருவமெல்லாம் முடிந்தபின் பாண்டி ஒரு சிற்றிதழில் ‘அமலதாஸன்’ என்ற பெயரில் பிரசுரமான தன் முதல் கவிதையை அமலாவிடம் காண்பிக்கிறான். அமலா அந்த கவிதையைப் படித்துவிட்டு ‘கவிதை நல்ல இருக்கு, ஆனால் பேரை மாற்றிவிட்டு – பின்னால் தேவையற்ற பிரச்சனை வரும்’ என்கிறாள். அந்த இடத்திலிருந்து இருவருக்குமிடையிலான காதல் மெல்லிசாக இழையோடுவதை explicit ஆக தெரியப்படுத்துகிறார் ஆசிரியர். ‘அமலதாஸன்’ என்பது போல அமலாவின் நிழலாய் வாழ்கிறான் பாண்டி. கல்லூரிக் காலங்களில் அவர்களிருவரும் செல்லும் இடங்களிலெல்லாம் நட்பு என்பதை மீறி ஒரு மௌனமான காதல் அவர்கள் அனுமதியின்றியே பின்தொடர்ந்து வருகிறது, அவர்களும் அதைத் தடுக்கவில்லை. உதாரணமாக, கன்னியாகுமரிக்கு செல்லும் போது இருவரும் திருவள்ளுவர்  சிலையில் உள்ள ஒவ்வொரு குறளாக பார்க்கிறார்கள். பாண்டி ‘யாதனின் யாதனின்’ குறளை பார்த்ததும் சிறிது துணுக்குற்று நகர்கிறான். அமலா பாண்டியிடம் ‘தலைப்பட்டார் தீரத்’ என்கிற குறளின் பொருள் கேட்டு ‘வா…கிளம்பலாம், நான் இன்னும் முழு துறவியாகவில்லை’ என்று நகர்கிறாள். இப்படியாக இருவருக்குமிடையே நுழைந்த காதலை மௌனமாகவே தங்களுக்குள் புதைக்கிறார்கள். இறுதியில் அமலா பாண்டியை விட்டுப் பிரிந்ததும் அவன் பித்துநிலையைஎட்டுகிறான் – அந்த நிலையில் அவன் இறந்துபோன அத்தையின் மகளாக சாரா என்கிற பெண்ணை உருவகித்து அவளை திருப்பலி நாட்களில் காதலித்து அவள் பாதங்களில் முத்தமிட்டு, பித்து நிலையின் உச்சத்தை தொட்டு விடுகிறான்.

Irrelvanceஆக தோன்றும் இந்தக் கடைசி இரண்டு அத்தியங்களுக்கும் மற்ற அத்தியாயங்களுக்கும் உள்ள தொடர்புகளை இவ்வாறு நான் பார்க்கிறேன்…

  • பத்தாம் நாள் திருவிழா முடிந்த மாலை, புனிதா பாண்டியிடம் சாரா ஊருக்கு சென்று விட்டார் என்று கூறுகிறாள். மனம் உடைந்து போன பாண்டி பித்துநிலை ஏறி ஏதேதோ எண்ணங்கள், வழக்கமான கவித்துவதோடு ஓடுகிறது. அப்போது சாராவைப் (அமலாவை) பற்றி ‘இச்சமயத்தில் சாரா கன்னியாஸ்திரி பட்டம் வாங்கியிருப்பாள். கடவுளுக்கு ஒப்புக் கொடுத்த பெண்! தலைமுடியை மளிப்பார்களா, கொண்டை வரை கத்தரிப்பார்களா தெரியவில்லை. ‘மாட்டார்கள். வட்டக் கொண்டை போட்டுக் கொள்ளலாம்.’ என்ன செய்தாலும் சிரித்துக் கொண்டேதான் இருந்திருப்பாள். அங்கியணிவித்திருப்பார்கள். தலையில் மூடாக்கு போட்டு முதுகுவரை தொங்கவிட்டுருப்பார்கள்.‘ 
    இந்த எண்ணவோட்டம் ,பாண்டியும் அமலாவும் மணப்பாட்டில் வைத்து பேசியது. பித்து நிலையின் வாசலில் அமலாவிடம் பேசிய வார்த்தைகள் இப்போது பித்து நிலையின் உச்சத்தில் சாராவாக உருவகிக்கிறது.
  • இம்மெர்சனுக்கு கடைசியாக அமலா மணப்பாட்டுக்கு வருவதும், ‘சாரா ஊரை விட்டு போய்விட்டாள், அவுங்க சிஸ்டருக்கு படிக்கிறாங்க, வில்லேஜ் எக்ஸ்பிரின்சுக்காகத்தான் இங்க வந்தாங்க’ என்று திருப்பலியின் போது சிறுமி புனிதா, பாண்டியிடம் சொல்வதும் ஒரு connection 
  • பாண்டியின் இரு காதல்கள் – விஜிலா & மரியபுஷ்பம்; இவர்கள் இருவரும் இவனை விட்டு பிரிவது பாண்டிக்கு விலாவில் இறங்கும் கத்தி போலத்தான். மரியபுஷ்பம் என்கிற பேரை இங்கே   சாராவுக்கு வைத்துப் பார்க்கிறான்  – ‘சாரா…மரியசாரா’ (முழுப்பேரு)

இப்படியாக பல சம்பவங்களை  ‘DisJoined Narrative Pattern’ஆக முத்துச் சிதறல் போல் ஆரம்பம் முதல் தூவி விட்டிருக்கிறார் JFK. சிதறல்களை ஒவ்வொன்றாக கோர்க்கவேண்டியது வாசகராகிய நம் வேலை என்றும் நினைத்திருக்கலாம். ஏனென்றால் அவ்வாறு கோர்ப்பது அந்த படைப்பின் வெற்றி மட்டுமல்லாது வாசிப்பின் உச்ச நிலையை அடைவதுமாகும்.  

நவீன இலக்கியம் பற்றி ஜெ.மோ. இப்படிக் குறிப்பிடுகிறார் “இலக்கிய வாசிப்பு என்பது ‘தெரிந்து கொள்ளுதல்’ அல்ல; ‘ஆராய்ந்து அறிதல்’ அல்ல; அது மொழியை வைத்துக் கொண்டு கற்பனையை விரித்தல். கற்பனையைத் தூண்டும் விதத்தில் படைப்பு நம் ஆழ்மனத்தைக் பாதிக்க அனுமதித்தல்”. அந்த வகையில் இந்தக் “கன்னி” நம் கற்பனையின் எல்லைகளையெல்லாம் அடித்து நொறுக்கி நம் ஆழ்மன சிம்மாசனத்தில் பொலிவோடு இருந்தாட்சி புரிகிறாள். 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s