இந்த வார விகடனில் (9-Mar-2017) வெளிவந்துள்ள ‘குருபீடம்’ என்கிற சிறுகதை இப்போதைய இந்தியா, ஏன்…உலகமே எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையின் கொடூரத்தை, படிக்கும் நம்மை சாத்வீகமான முறையில் கூறிப் பதற அடிக்கிறது. ஜா. தீபா எனும் பெண் எழுத்தாளர்  எழுதியுள்ளார். இவர் சினிமாத்துறையில் உதவி இயக்குனராக இருக்கிறார் என்றும் இதற்கு முன்னே சினிமா சம்பந்தமான இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. தெளிந்த நீரோடையைப் போல கதையை நகற்றி, நாட்டின் தலையாய பிரச்சினையை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சொல்லி, வாசகனின் மனதில் அறைந்து கதையை முடிக்கிறார்.

சிவகாமி தன் திருமண பத்திரிகையை, நெடுந்தொலைவில் இருக்கும் தனது பழைய ஐந்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்க்கு கொடுப்பதற்குச் செல்கிறாள். அந்த ஆசிரியர் இப்போது எங்கிருக்கிறார், எவ்வாறு இருக்கிறார், இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று எதுவுமே தெரியாமல் அவள் அங்கு செல்கிறாள்.  இருபது வருடங்களுக்குப் பின், தொடர்பறுந்துப் போன அந்தப் பள்ளியும் ஆசிரியரும் சிவகாமியின் மனதில் ஏன் தோன்றினார்கள் என்ற கேள்வியை ஆரம்பம் முதலே நம் மனதில் எழ வைத்துவிடுகிறார். இருபது வருடங்களாக அவரை பார்க்கவில்லையென்றாலும் அவரின் நிறம் மற்றும் வளர்த்தி என்று எல்லாமே சிவகாமிக்கு ஞாபகம் இருக்கிறது. அவரின் ஆங்கிலப் பாடம் நடத்தும் திறனைப் பற்றி சிலாகித்து நினைத்துப் பார்க்கிறாள்.

child-abuse

அந்த ஊருக்கு வந்ததும் பள்ளிக்குச் சென்று மாறன் வாத்தியாரைப் பற்றி விசாரிக்கிறாள். அவள் நல்ல நேரம் மாறன் வாத்தியார் அந்த ஊரில் தான் வாழ்கிறார் என்று தலைமை ஆசிரியர் மூலம் தெரிந்துக் கொண்டு மகிழ்ச்சியோடு அவரின் வீட்டிற்கு செல்கிறாள் சிவகாமி. மாறன் வாத்தியார் அவள் நினைத்த மாதிரியேதான் இருக்கிறார். அவரின் மனைவிக்கும், தன் கணவரிடம் படித்த பழைய மாணவி மிகுந்த மரியாதையுடன் திருமண பத்திரிகையை கொண்டு வந்திருப்பதைப் பார்த்து லேசான பெருமையும் சந்தோஷமும் முகத்தில் தெரிய வரவேற்று வீட்டினுள் அழைக்கிறார்.

மாறன், சிவகாமியின் அப்பாவின் பெயர், வீடு இருந்த இடம், படித்த வருடம் எல்லாவற்றையும் வாத்தியார் விசாரிக்கிறார். சிவகாமி சொன்ன பதில்கள் கொடுத்த யோசனையில் தரையையே கொஞ்ச நேரம் கொண்டிருக்கிறார்.

“உனக்கு, இருபத்தஞ்சு வயசு இருக்குமா?” என்று கேட்டாள் வாத்தியாரின் மனைவி.

`‘முப்பது.’’

“இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணிக்காம இருந்திருக்கியே? பார்க்க லட்சணமா இருக்க. எங்க மகளுக்கு இருபது வயசுலேயே கல்யாணத்தை முடிச்சுட்டோம்” என்றாள்.

“கல்யாணம்னாலே பயமா இருந்தது அதான்.” என்றாள் சிவகாமி.

“அது என்ன அப்படி?’’

“நீ போய், குடிக்க கலர் எடுத்துட்டு வா” என்றார் வாத்தியார் வேகமாக.

இந்த இடரலில், அவ்வளவு நாள் புதைந்து கிடந்த அழுக்கான, அசிங்கமான உண்மைகள் மெதுவாகவும் வீரியத்துடனும் சிவகாமியின் மூலம் வெளிவரத் தொடங்குகிறது.

சிவகாமி தொடர்கிறாள்….சார், நல்லா இங்கிலீஷ் எடுப்பார். அதை நான் மறக்கவே இல்லை. அதோடு வேற ஒரு விஷயமும் செய்துட்டார். அதையும் மறக்க முடியலை” – சிவகாமிக்குக் குரல் அடைக்கிறது.

இங்கே ஒரு நிதர்சனத்தை நமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது – பாலின்பம் என்பது உயிரினங்களின் அடிப்படைத் தேவை. இதை வெறுமனே அடக்கி வைத்தல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. இங்குத்தான் கற்புக் கோட்பாடுகளும், பண்பாட்டுப் புனிதங்களும் தேவைப்படுகின்றன. 90களுக்குப் பின்பான சூழ்நிலையில் தாராளமயமாக்கல் அல்லது உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் போன்றவற்றால் பெண்கள் வெறும் நுகர்வுபொருளாகியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாலியல் மிகத்தீவிரமாகி புரையோடிப்போயிருக்கிறது. இந்நிலையில் ஒழுக்கம் என்பது கேள்விக்குறியாகி, இந்த நுகர்வுப்பொருட்களை விதவிதமாக நுகரவேண்டும் என்ற ஆசை வெறியாகி, பண்பாட்டு எல்லைகளையெல்லாம் மீறி எப்படி வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. புறச் சூழலால் தூண்டப்பட்ட இந்த இச்சைக்கும், வக்கிரத்துக்கும் மிக எளிதாகப் பலியாகி விடுபவர்கள், குழந்தைகளே! சிவகாமி அப்படிப்பட்ட ஒரு பலிகடா. பத்து வயதில் நடந்த அந்த விரும்பத்தகாத விபத்து, பிஞ்சு நெஞ்சில் ஆறாத ரணமாகி பழுத்து முப்பது வயதிலும் அருவருக்கத்தக்க நினைவாக சீழ் வடிகிறது.

“உங்களைப் பற்றி எப்ப நினைச்சாலும் தானாவே கண்ணீர் வரும். அதை அடக்க முடியாம போற அவமானம் எப்படிப்பட்டது தெரியுமா? தப்பே செய்யாத நான் இப்ப வரைக்கும் தொடர்ந்து தண்டனையில் இருக்கேனே சார். நீங்க நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டு சிவகாமி, வாத்தியாரையே பார்க்கிறாள்.

அதற்கு பின்பான கோரமான மௌனத்தை நாமே கற்பனை செய்துகொள்ள அனுமதிக்கிறார் ஆசிரியர். உலகின் கொடூரமான அனைத்துப் பாம்புகளுக்கு நடுவே மாறன் வாத்தியாரை உட்காரவைத்தது போலான சூழ்நிலை அந்தத் தருணம். வீட்டின் உள்ளே இருந்து கொலுசுச்சத்தம் மெலிதாகக் கேட்க மாறனின் பேத்தி மெதுவாக வந்து வாயடைத்து உட்கார்ந்திருந்த வாத்தியாரின் மனைவியின் மடியில் புன்னைகையோடு உட்காருகிறது.

“இவங்கதான் உங்க பேத்தியா? பள்ளிக்கூடத்துல சேர்த்தாச்சா?” என்று கேட்டாள் சிவகாமி; சிவகாமியின் இந்த பொதுவான கேள்வியுடன் ஓராயிரம் கேள்விகளை கேட்காமலே நம் மனதில் எழச் செய்து கதை முடிகிறது.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர். இதில் 8 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது. ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் பெண் குழந்தைகள் 55 சதவீதமும், ஆண் குழந்தைகள் 45 சதவீதமும் காணாமல் போகிறார்கள். இது போக, வாழும் சூழலிலேயே குழந்தைகளின் மீதான பாலியல் வன் கொடுமையானது பெரும்பாலானவை நெருங்கிய உறவினர்களால்தான் நிகழ்த்தப்படுகின்றன. குழந்தையின் மாமனால், சித்தப்பாவால், பக்கத்து வீட்டுக்காரரால், மாறன் போன்ற ஆசிரியரால், ஏன் குழந்தையின் சொந்தத் தந்தையால் கூட நிகழ்த்தப்படுகிறது.

இது போன்ற ஒரு சீரழிவான சமுதாய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான சட்டமும், தண்டனையும் மட்டும் போதுமா? இந்தச் சட்டமும், தண்டனையும் காலமாற்றத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே தான் இருந்திருக்கிறது? பின் ஏன் இந்தக் குற்றங்கள் பெருகிக் கொண்டே போகிறது? தனிமனித ஒழுக்கம் என்பது ஒரு mythஆக தான் உள்ளது. அது ஏதோ ஞானிகளுக்கும், துறவிகளுக்கும், பிஞ்சுக் குழந்தைகளுக்குமே உண்டானது என்ற எண்ணம் பரவலாக உள்ளதோ என்று எண்ணுகிறேன். கலிகாலத்தில் பிறந்தவர்கள் இதையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ பழகிக்கொள்ளவேண்டுமோ என்னவோ?

கடவுளுக்கே வெளிச்சம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s