18 ஆவது அட்சக்கோடு வழக்கம் போல் அசோகமித்திரனின் எளிமையான அல்லது எளிமை போல் மாயத்தோற்றம் தரும் எழுத்துக்களுடன் வலிமையான களத்தை கொண்டுள்ள நாவல்.  ஒரு சராசரியான பதின்பருவப் பையன் சந்திரசேகரின் பார்வையில் தான் கதை சொல்லப் படுகின்றது. இந்தச் சந்திரசேகரன் அசோகமித்திரனின் சாயல் என்றே நினைக்கிறன்.

18081016

இந்தியா விடுதலை பெற்றுவிட்ட போதிலும்  ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் இணைய அல்லது தனித்தியங்க விரும்பி மக்களிடம் மதவெறியை தூண்டிவிடுகிறார். அதுவரை அந்தக் காலனியில் நெருக்கமானவர்கள் கூட மதவேற்றுமை பாராட்டி எதிரி ஆகிறார்கள். இந்த விளைவுகளுக்கு அஞ்சி மக்கள் அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுகிறார்கள். இப்படியாக இரண்டு ஆண்டுகள் அச்சமூட்டிய ரஜாக்கர்கள், துப்பாக்கிகளோடு வந்த இந்தியப் படையை வாள்கொண்டு எதிரத்து மாண்டு மீண்டும் அம்மாநிலம் இந்திய மாநிலமாகி யதார்த்த நிலைக்கு மெதுவாக வருகிறதென்று  முடிகிறது. சந்திரசேகரனும் அவன் குடும்பமும் இந்தக் காலகட்டத்தில் மிக வெள்ளந்தியாக வாழ்கிறார்கள். அன்றாட வாழ்க்கையை ஓட்ட மட்டுமே தெரிந்த, வெளியில் நடக்கும் எவ்வித ப்ரளயமும் அவர்களுக்கு ‘அப்படியா’ என்கிற மாதிரியான செய்தியாக எடுத்துக் கொள்ளத் தெரிந்த பரிதாபத்துக்குரிய நடுத்தர வர்கக்  குடும்பம். அப்படியான சூழ்நிலையில் வாழும் சந்திரசேகரன், அவனையும் அறியாமல் மத வேற்றுமை அவன் மனதில் வேரூன்றி வளருகிறது. விவரமற்றுப் போய் போராட்டங்களில் கலந்துக் கொண்டு கல்லூரிப் படிப்பையும் பாதியில்  விடுகிறான். காந்தி இறந்த செய்தி கேட்டு, அவரை ஒரு முஸ்லீம் தான் கொன்றிருக்க வேண்டும் என்றெண்ணி வெறிகொண்டு நடுஇரவில் அவன் கதறுவது, சமூகம் அவன் மீது பின்னப்பட்ட மதவெறி என்கிற சிலந்தி வலை என்பதை அமி மிக நுணுக்கமாகவும் யதார்த்தமாகவும் விவரித்திருப்பார். உச்சக் கட்டமாக, ஒரு முஸ்லீம் சிறுமி தன்னை எடுத்துக் கொண்டு தன் குடும்பத்தை விட்டுவிட கெஞ்சும் போது சந்திரசேகரன் தன்னை அறியாமல் தன் மீது பூசப்பட்ட அரசியல் சாயம் தன்னை எங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறது என்று எண்ணுகிறான்-அந்த இடம் நாவலின் உச்சம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தானிருப்பதே பெரும் பாவம் என்றெண்ணுபவன் அவன். அவன் தன்னை மற்றவர்கள் எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பதை உணரும்போது,  தான் ஏதும் செய்யாமல், ஆனால் நடக்கும் அனைத்துக்கும் தான் எவ்வாறு காரணியாகி இருக்கிறோம் என்ற சுயபிரக்ஞையை  அடைகிறான். சந்திரசேகரன் என்கிற பையன் அந்தக் கணத்தில் மனிதனாகிறான்.

அவர் இந்த நாவலை எழுதிய போது ஐதராபாத்திலிருந்து நீங்கி 20-25 ஆண்டுகளுக்கு மேலிருக்கும் என்கிறார்கள். எதற்காக இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார் என்ற கேள்வி இப்புனைவைப் படிக்கையில்  தோன்றியது. மிகச் சமீபத்தில் இதைப் பற்றிய கேள்வியில், அமி அவர்கள் இவ்வாறு கூறுகிறார் – ‘வரலாற்றுப் பதிவுகள் எப்போதுமே சிறிது காலம் தாழ்த்தித் தான் எழுத வேண்டும்; ஏனென்றால், உடனடியாக எழுதினால் அந்தப் பதிவுகள் பொய்யாகிப் போக பல சாத்தியங்கள் உண்டு’ என்று கூறியுள்ளார். அது மிகச் சரிதான் என்பதற்கு நிறைய சமகாலச் சான்றுகள் உள்ளன. ஆனால் காலம் தாழ்த்தி அப்பழைய பதிவை எழுதும் போது, கால மற்றும் சம்பவங்களின் துல்லியம் நீர்த்துப் போக வழியுண்டு. ஆனால் அமி, எப்படி இந்த நிலச்சித்திரங்களை (ராஜ வீதிகளையும், சிறு சந்துக்களையும்,  தெருக்களையும்,  பூங்கா, பள்ளி, கல்லூரி, தியேட்டர் etc) என்று இவ்வளவு துல்லியமாய் அவர் மனதிலிருந்து எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்பது வியக்கத்தக்கதுதான்.

மொத்தத்தில் ஒரு ஜீனியஸ் எழுதிய குறைகளற்ற பூரணமான நாவல்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s