நம் எல்லோருக்கும் வாழ்வென்பது மரணத்தை நோக்கிய பயணம் எனத் தெரியும் தான் – ஆனால், மரணம் என்றால் என்ன? அது நேரும் போது நம் உடலுக்குள் என்ன நடக்கிறது? அது நடந்த பின் என்ன நேருகிறது? மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா? என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினால் வாழ்க்கை நரகமாகிவிடுகிறது பலருக்கு, அல்லது வாழ்வைப் பற்றிய எண்ணம் மாறுகிறது சிலருக்கு.

   

பைபிள் மற்றும் புராண இதிகாசங்களிலும் மரணத்தைப் பற்றியும் அதன் பின், தவறு செய்தவர்களுக்கு நரகமும், நன்மை செய்தவர்களுக்கு சொர்க்கமும்  என்பது போலான கதைகளையும் கேட்டிருக்கிறோம்.

எனக்கு மிகவும் பிடித்த, தினமும் நான் தொழுகின்ற ‘சுப்ரமணிய புஜங்கத்தில்’ கீழ்கண்ட பாடல் ஒன்று உண்டு. நாம் இறந்தவுடன், எமன் நேரில் வந்து நம்மை தர தரவென இழுத்து கொண்டு மேலே செல்கையில், நாம் செய்த ஒவ்வொரு பாவங்களையும் கூறி நம்மை கலங்கச் செய்வான். அப்படிப்பட்ட சூழ்நிலையை எனக்கு கொடுக்காமல், முருகா…என்னுடன் வந்து என்னை பரிவோடு மேல கூட்டிச்செல், என்பது போல இந்த பாடல் வருகிறது.

க்ருதாந்தஸ்ய தூதேஷு  சண்டேஷகோபா

த்தஹுச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸ

மயூரம் ஸமாருஹுfய மாபைரிதி த்வம்

புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம்

அதேபோல், அபிராமி சந்ததியில், காலன் என்னை நடுநடுங்க ‘வா’ என்று அழைக்கும் போது, அம்மா…என்னை பரிவோடு அரவணைத்து கூட்டிச் செல் என்று வருகிறது.

இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க

அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்

குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

இப்படிப் பல பாடல்களும் மரணத்தைப் பற்றி போகிற போக்கில் கூறிச் செல்கிறது.

எழுத்தாளர் பாலகுமாரனின் எந்த கதைகளையும் இதுவரை படித்ததில்லை. அவர் இறந்த பிறகு முகப்புத்தகத்தில் பலரும் ‘சொர்கம் நடுவிலே’ நாவலைப் பற்றி கூறியத்தை அடுத்து, ஆவல் அதிகரிக்க இந்நாவலை படிக்க ஆரம்பித்தேன்.

என் பெயர் கேசவன் நாராயணன். சோழ நாட்டின் உப தளபதி. போர் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது பூமியிலுமில்லாமல் ப்ரபஞ்சத்திலுமில்லாமல் இடையிலே ஆகாயத்தில் அலைகிறேன்.இங்கே காலம் வித்தியாசமானது. சூரியன் உதிப்பது மறைவது என்று எதுவுமே இல்லை. மங்கலான ஒரு வெளிச்சம் மட்டும் உள்ளது.” என்று இந்தக் கதை ஆரம்பிப்பது ஒரு ஆச்சர்யத்தையும் ஈர்ப்பையும் ஒரு சேர தருகிறது.

மரணத்தைப் பற்றியும் அதற்கு பின்பான ஒரு ‘வாழ்வை’ப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறார். இங்கே நான் ‘எடுத்துரைக்கிறார்’ என்று சொன்னக் காரணம், நாவல் எங்கும் ஒரே உரைநடை போல மரணம் பற்றி கூறிக் கொண்டே போகிறார் – இடையிடையில் கதை போல் ஏதோ ஒன்று வருகிறது. ஒட்டுமொத்த கதையமைப்பில் கூடுதலான மரணம் பற்றிய பிரசங்கத்தில் (கதாபாத்திரத்தின் வழியாக ஆசிரியர்) இந்தப் படைப்பு நீர்த்துபோகிறது.

ஆனால், மரணமடையும் போது நிகழும் நிகழ்வுகள், மனதுக்கும் ஆன்மாவுக்குமான போராட்டங்கள், வைதரணி நதி, அதைக் கடக்கும் போது நடக்கும் நிகழ்வுகள் என அனைத்தும் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. வாழ்வைப் பற்றியான பார்வையும் மாறுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை மரணத்திற்குப் பின்னால் இருக்கிறது என்று தெளிவாகப் புரிகிறது.

உடம்பை விட்டு உயிர் பிரிந்த பின் அந்த உயிர் என்கிற பிராணன் பூமிக்கு மேல் உள்ள அதிக வெப்பத்தைக் கடந்தாக வேண்டும். இதைத் தாண்டித்தான் அந்த அமைதியான இடத்திற்குப் போகவேண்டும். உயிர் உடம்பை விட்டு போகிறபோது எந்தவித பிரக்னஞயும் அற்றுப் போவதில்லை. உயிராக இருந்தபோது என்ன பிரக்னஞ இருந்ததோ, என்ன அனுபவப் பதிவு இருந்ததோ, அதையும் எடுத்துக் கொண்டு போகிறது. அந்த அனுபவப் பதிவுக்கு, குறைவான சூடு, அதிகமான சூடு என்பது தெரியும். அந்த உயிர் நடந்தபோது சூடு பற்றிய அனுபவம் அந்த உயிரோடு போகிறது. அது பூமியை விட்டு விலகியதும் பூமியின் வெப்பம் மறைந்துபோய் பூமிக்கு மேல் உள்ள வெப்பம் மிக முக்கியமாக்கப்படுகிறது. அந்த வெப்பத்தை, உடம்பு இருப்பது போல் தோற்றம் உள்ள அந்த மனம், உயிரைச் சுற்றி உள்ள நினைவு அனுபவித்துக் கடக்கிறது.

அந்த வெப்பத்தைத் தாண்டியபிறகு, அதே வெப்பம் அந்த நினைவுகளில் பலவற்றைக் கிழித்து விடுகிறது. பல நினைவுகள் பொசுங்கிவிடுகின்றன. அந்த வெப்பம் தாண்டுதல் பயம் கூடியதாகவும் பதட்டம் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஆனால், தாண்டியாக வேண்டிய அவசியம் இருக்கிறது. தாண்டிய பிறகு ஒரு விடுதலை ஏற்படுகிறது. நினைவில் இருந்த பல்வேறு விஷயங்கள் காணாமல் போகின்றன. இதுவே வைதரணி நதி எனப்படுகிறது. இதைத் தாண்டுவதற்குத் தான் கடவுள் அல்லாத பிரபஞ்ச சக்தியின்  துணை தேவைப்படுகிறது.

‘பற்றற்று இரு’ என்பதன் அர்த்தம் தெளிவாகவே புரிகிறது. பற்று அதிகம் வைக்க வைக்க அதன் பதிவுகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. அந்த பதிவுகளைக் கழிக்கவே பல பிறவிகள் எடுக்கவேண்டியுள்ளது. புனரபி ஜனனம் – புனரபி மரணம் என்று ஆதி சங்கரர் கூறியது இந்த சங்கடங்களையெல்லாம் மனதில் வைத்துதான்.

தர்ப்பணம் என்பதைப் பற்றியும் அதன் முக்கியத்துவதை பற்றியும் கதையின் போக்கில் கூறியுள்ளார். கேசவன் கொலையுண்டபிறகு அவரின் மகன் தர்ப்பணத்தை மிக கர்மசிரத்தையுடன் செய்ததால் தனக்கு பசி, தாகம் எதுவும் ஏற்பட்டதில்லை என்று கேசவன் ஞானியிடம் கூறுகிறான். வைதரணி நதி தாண்டி பூமியின் மேல் பகுதிக்கு வந்தவுடன் பூமியிலுள்ள பசியும், தாகமும் கொஞ்சம் தொந்தரவு செய்யும். அந்தப் பழக்கம் மனத்துக்குள்ளிருந்து ‘பசிக்கிறதே’, ‘தண்ணீர் இல்லையே’ என்பது போல ஒரு நினைவு ஏற்படும். கீழே நீர் வார்க்க, பிண்டம் வைக்க, உடனடியாய் அது விலகிக் கொள்ளும்.

யக்ஷர்கள் – இது உயிரின் இன்னொரு வடிவம். வேறு ஒரு நிலை. மலர்ந்த ஸ்திதி. நன்கு பாடியவர்கள், நடனம் அடியவர்கள், கவிதை பேசியவர்கள், வீணை, குழல் வாசித்தவர்கள், ஓவியம், சிற்பம் செய்தவர்கள், வேத விற்பன்னர்கள், பாடலாசிரியர்கள், தமிழ் மறை ஓதியவர்கள், நாதஸ்வர கலைஞர்கள் இறந்த பிறகு கந்தர்வர்கள் ஆவார்கள். இதைப் படிக்கும் போது ஷீரடி சாய்பாபாவை நினைவில் கொள்கிறேன்.

ஆக மொத்தத்தில், இந்த நாவலுக்கும் இலக்கியத்திற்கும் ஒன்றும் பெரிய சம்பந்தம் இல்லை எனலாம். ஆனால், நம் வாழ்வின் எஞ்சிய பொழுதை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. மரணத்தின் சூட்சமத்தைத் தெரிந்துகொண்டால் எதுவும் நிச்சயமற்ற வாழ்வில் நாம் நடித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிவிடும். அந்த வெளிச்சம் ஏற்படும் போது, எதிலும் பற்றற்றிருந்து தாமரை இலைத் தண்ணீராய் வாழ்வைப் பார்த்தோமானால், நம்மைச் சார்ந்தவர்களிடமும் சுற்றியிருப்பவர்களிடமும் எவ்விதத்தில் பழகலாம் என்ற தெளிவு பெற்றுவிடுவோம். அது பதிவுகளைச் சேர்க்காது, பற்றை வளர்க்காது வாழ்க்கையை லேசாகிவிடும் சூட்சமத்தைக் கற்றுத் தருகிறது. இந்தத் தெளிவு இந்த நாவலைப் படித்தால் நமக்கு கண்டிப்பாக கிடைக்கிறது. அப்படி பார்க்கும் போது, இது இலக்கியதையெல்லாம் தாண்டி மனிதனுக்கு பயன்படும், அவன் அறிவுக்கண் திறக்கும் பொக்கிஷம்.

One thought on “சொர்கம் நடுவிலே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s