வாசிப்பானுபவம் என்பது என் தாத்தாவின் தயவில், என்னுடைய கால்ச்சட்டைக் காலத்தில், எங்கள் ஊரில் (பாளையங்கோட்டை) உள்ள திருவள்ளுவர் சிறுவர் நூலகத்திலிருந்து தொடங்கியது. துப்பறியும் சங்கர்லால் (தமிழ்வாணன்) நாவலில் ஆரம்பித்து TINTIN, ASTRIX, ராஜேஷ்குமார், அகதா கிறிஸ்டி, சிட்னி ஷெல்டன் etc., என்று வகைதொகை இல்லாமல், என் சிறு மூளைக்கு ஏற்றவாறு வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கியம் என்றால் அது வேற ஏரியா, நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலையிலேயே இருந்தேன். அதிக பட்சமாக, சுஜாதாவின் நாவல்களில் வந்து நின்றது என் இலக்கிய(?)  வாசிப்பு.
அதன் பிறகு, பட்டம், பட்டமேற்ப்படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள் என்ற யதார்த்தமான பதார்த்ததில் சிக்கி உழன்று கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் வாசிப்புக்கு வனவாசம் தான். இன்று, வாழ்க்கையின் பாதிக்கிணற்றின் வழியில், மீண்டும் இந்த வாசிப்பில் ஆனந்தமாக என்னை நானே தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், இலக்கியம் எனும் மஹா சமுத்திரத்தை பிரமிப்புடனும், அயர்ச்சியோடும் அதன் கரையில் நின்று கொண்டு என் கால் விரல்களை நனைத்துக்கொண்டிருக்கிறேன்.
சிறுகதையின் திருமூலரும் (மௌனி), புதுமைப்பித்தனும், ஜி.நாகராஜனும், ஜெயகாந்தனும் தமிழ் இலக்கியத்தில் அழிக்க இயலாத முத்திரையை பதித்துச்சென்றவர்கள். கவிதையில் நகுலன் தாத்தா என் மனதிற்கினியவர். எப்போதெல்லாம் என் மனது சோர்வடைகிறதோ, அப்போதெல்லாம் நகுலன் தாத்தாவின் முகத்தையும் அவரின் சில கவிதைகளையும் வாசிப்பேன். இவர்களை மட்டும் கோடிட்டதினால் மற்றவர்கள் சளைத்தவர்களா என்று நினைக்கவேண்டாம் – அனைவரும் ஜாம்பவான்களே.
என் வாசிப்பு எந்த விதமான அனுபவத்தை எனக்கு கொடுத்தது என்று நானே அறிய, என் வாசிப்பானுபவத்தை எழுதுகிறேன் – அப்படியே அதை உங்களுக்கும் தெரிவிக்கவே இந்த blog.

இப்படிக்கு,
மணியன் @ PK